திரு. ஆர். என். ரவி
தமிழ்நாடு ஆளுநர்
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் பற்றிய சில முக்கிய குறிப்புகள்
திரு. ஆர். என். ரவி அவர்கள் பிகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தார். 1974-இல் இயற்பியலில் முதுகலைப் பட்டத்தை முடித்தார். 1976-இல் இந்திய காவல் பணியில் (இ.கா.ப.) சேர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். மத்திய புலனாய்வுத் துறையில் (சிபிஐ) பணியாற்றியதோடு ஏராளமான ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கமைப்பு குற்றச்செயல் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவர் தலைமை தாங்கினார்.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள நாட்டின் முதன்மை உளவு அமைப்பான இந்திய உளவுத்துறையில் (ஐபி) பணிபுரிந்தபோது, வன்முறைகள் மற்றும் கிளர்ச்சிகள் நிறைந்த பகுதிகளான ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக காலம் பணியாற்றினார். தெற்காசியா மனித இடம்பெயர்வு இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்ற அவர். எல்லைகளில் வாழும் மக்கள்தொகை தொடர்பான அரசியல் சமூகவியல் ஆய்வில் விரிவாக ஈடுபட்டார்.
இனக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிகழும் மோதல்களுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் அவர் முக்கியப் பங்காற்றி ஆயுதம் தாங்கிய பல கிளர்ச்சிக் குழுக்களை தேசிய நீரோட்டத்துக்கு கொண்டு வந்தார். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் உளவுப்பகிர்வில் இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பை எட்டும் நடவடிக்கைகளின் சிற்பி ஆக அவர் விளங்கினார். 2012-இல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தேசிய நாளேடுகளில் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார்.
பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் கூட்டு உளவுக் குழுவின் (ஜேஐசி) தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்திய உளவு சமூகத்தின் தலைவராக நாட்டின் தேசிய பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய உளவு அமைப்புகளை ஒருங்கிணைத்து அவற்றுக்கு வழிகாட்டி ஆக விளங்கினார்.
2014, ஆகஸ்ட் மாதம் நாகா அமைதிப் பேச்சுவார்த்தைக்கான மத்திய அரசின் மத்தியஸ்தராக அவர் நியமிக்கப்பட்டார். அதுநாள்வரை வெளிநாட்டில் விவாதிக்கப்பட்டு வந்த பிரச்சினையை சொந்த நாட்டில் அதன் மக்களிடம் கொண்டு வந்து, உண்மையான பங்குதாரர்களை பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைத்து உண்மையிலேயே இந்த விவகாரத்தை உள்ளடக்கியதாக்கி அமைதி காணும் நடைமுறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை மிக குறுகிய காலத்திற்குள் சாதிக்க அவரால் முடிந்தது.
இதன் பயனாக வெகு விரைவிலேயே, எழுபது ஆண்டுகளாக நீடித்து வந்த பிரிவினை கிளர்ச்சிகளுக்குத் தீர்வாக ஐக்கிய இந்தியா மற்றும் இந்திய அரசியலமைப்பு வரம்புக்குள் வரும் உடன்பாட்டில் அனைத்து கிளர்ச்சி ஆயுதக்குழுக்களும் கையெழுத்திட்டன. இது நாகாலாந்து மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த வகை செய்தது. 2018, அக்டோபரில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார்.
2019, ஆகஸ்ட் 1 முதல் 2021, செப்டம்பர் 16 வரை நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக அவர் பணியாற்றினார்.
2021, செப்டம்பர் 18-ஆம் தேதி ஆளுநர் ரவி அவர்கள் தமிழ்நாட்டின் 26-வது ஆளுநராக பதவியேற்றார். அதன் பிறகு அவரது தலைமையின் கீழ் ஆளுநர் மாளிகை, பாரதத்தின் நாகரிக விழிப்புணர்வை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த தமிழ்நாட்டின் வளமான இலக்கியம், கலாச்சாரம் மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தை மீண்டும் உற்சாகப்படுத்த தொடர்ச்சியான முன்முயற்சிகளை ஆளுநர் மாளிகை தொடங்கியது. உண்மையான தமிழ் மரபின் அடையாளமான திருவள்ளுவர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், கவிச்சக்கரவர்த்தி கம்பர், சுவாமி திருவருட்பிரகாச வள்ளலார், அய்யா வைகுண்டர் உள்ளிட்ட துறவிகள், புலவர்கள், ரிஷிகள் கட்டிக்காத்த உள்ளடக்கிய மதிப்புகள் மற்றும் ஞானத்தை போற்றிக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகை நடத்தி வருகிறது.
ஆளுநர் மாளிகை, நமது தேச விடுதலைக்காக தங்களின் அனைத்தையும் கொடுத்து இன்னுயிரைத் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரிதும் போற்றப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பணிகளை கண்டறிந்து ஆவணப்படுத்தும் ஆராய்ச்சிகளை ஊக்குவித்து வருகிறது. ஆளுநர் மாளிகையின் ஆதரவுடன் புகழ் வாய்ந்த அறிஞர்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்; பழங்கால கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள், பனை ஓலைச் சுவடிகள், செப்புத் தகடு எழுத்துகளில் பொதிந்த பாரதத்தின் கோடிக்கணக்கான பழம்பெரும் கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தின் தொடர்ச்சியை தடையின்றி பிரதிபலிக்கும் பாரம்பரிய தமிழ் நூல்கள் மூலம் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வளமான பண்டைய மரபை மீண்டும் கண்டறிய ஆளுநர் மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றில் சில ஏற்கெனவே பிரசுரிக்கப்பட்டு பொதுவெளியில் கிடைக்கின்றன.
ஆளுநர் மாளிகை, கல்வி மற்றும் தொழிற்துறை தலைவர்களின் பருவகால கூட்டு மாநாடுகள் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுக்கவும் புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் வாய்ந்த அறிவுசார் சொத்துகளை உருவாக்கவும் கல்வி மற்றும் தொழிற்துறையை ஊக்குவித்தும், தேசிய அளவிலான தரவரிசையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களைச் சிறப்பிக்கும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) செவ்வரங்க நிகழ்வுகளை நடத்தி அவற்றின் மூலம் சிறந்த புத்தாக்க நடைமுறைகளை பகிரச்செய்து அவை இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி ஊக்கம் பெறவும் அவர்களின் சிறப்பியல்புகளை வெளிக்கொண்டு வரும் ஒரு ஊக்கியாக தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆளுநர் மாளிகை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைகளில் உள்ள இளம் தொழில்முனைவோர் மற்றும் தலைவர்களின் மாநாடுகளை தொடர்ந்து நடத்துகிறது. இவற்றின் மூலம் புத்தாக்கம் மற்றும் புதிய தொழில்களை தொடங்கும் உந்துதலுக்கு உதவவும் மாநிலத்தில் தொழில்முனைவு நிறைந்த சூழலை வலுப்படுத்தவும் முடிகிறது.
நாடு முழுவதும் தமிழைப் பரப்புவது ஆளுநர் மாளிகையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழி பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்புகளை வழங்க ஆளுநர் மாளிகை ஆதரவளித்து வருகிறது. கவுஹாத்தி பல்கலைக்கழகம் ஏற்கெனவே வடகிழக்கு மாணவர்களுக்காக தமிழ் மொழி பட்டயப்படிப்பைத் தொடங்கியுள்ளது. இக்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ்நாட்டின் மொழி, கலை, கலாச்சாரம், இலக்கியம், உணவு முறை, பாரம்பரியம், மரபு மற்றும் விருந்தோம்பல் பற்றிய ஆழமான புரிதலை முழுமையாக கற்றறிய ஏதுவாக ‘தமிழ்நாடு தரிசனம்’ என்ற முழு நிதியுதவித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு அழைக்கப்படுகிறார்கள். தமிழ் அல்லாத பின்னணி கொண்ட தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் பாரதிய மொழிகள் தினத்தில்
(பாரதிய பாஷா திவஸ்) ஆளுநர் மாளிகையில் கெளரவிக்கப்படுகிறார்கள்.
ஆளுநர் ரவி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பறை இசை, நாட்டுப்புற நடனங்கள், நாடகம் போன்ற பண்டைய தமிழ் கலை வடிவங்களுக்கு புத்துயிர் அளிப்பதற்கும், கம்பர் கழகங்கள் போன்ற கலாச்சார அமைப்புகளை வலுப்படுத்தவும் ஆளுநர் மாளிகை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்ச் சமூகத்தில் இயல்பாக இருக்கும் நேர்மறை சக்திகளை வளர்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும், ஆளுநர் மாளிகை ஒவ்வொரு ஆண்டும் ’சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு‘ஆகிய துறைகளில் சமூகத்திற்கு சிறப்பாக சேவை வழங்கி வரும் மாநிலத்தில் அதிகம் அறியப்படாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை அடையாளம் கண்டு கௌரவிக்கிறது. மாணவர்கள் தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார மரபில் வேரூன்றி இருக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் கவிச்சக்கரவர்த்தி கம்பர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் பிறந்த நாட்களை நினைவுகூரும் மாநில அளவிலான வருடாந்திர கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை ஆளுநர் மாளிகை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு தினத்தில் வருடாந்திர கட்டுரைப் போட்டி நிகழ்வுகளை நடத்தி வருவதன் மூலம் பாபா சாகேப் அம்பேத்கரின் மாண்பை ஆளுநர் மாளிகை, கொண்டாடி வருகிறது.
ஆளுநர் ரவி அவர்கள், உயரிய மத்திய மற்றும் மாநில குடிமைப் பணியில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் சேர ஏதுவாக, அவர்களிடையே போட்டி மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யேக வழிகாட்டும் கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.
பொங்கல், நவராத்திரி கொலு, கிறிஸ்துமஸ் என ஒவ்வொரு பண்டிகை நிகழ்வை ஆயிரக்கணக்கானோரின் உற்சாக பங்கேற்புடன் ஆளுநர் மாளிகை தொடர்ந்து கொண்டாடி வருகிறது. இவை மட்டுமின்றி விவசாயிகள், விளையாட்டு வீரர்கள், அறிஞர்கள், தொழில்முனைவோர், தடைகளை தகர்த்து சாதனை படைத்து வரும் மகளிர் முன்னோடிகள், திருநங்கைகள், மாற்றுத்திறன் வாய்ந்த சிறார்கள் உள்ளிட்டோரின் சாதனைகளை வெளிக் கொண்டு வரும் ‘எண்ணித் துணிக’ (Think to Dare) தொடர்கள் போன்ற காலமுறை நிகழ்வுகள் மூலம் ஆளுநர் மாளிகை ஒரு “மக்கள்மாளிகை” (லோக் பவன்) ஆக மாறியிருக்கிறது.